சவுதி அரேபியாவில் ஒருங்கிணைந்த எக்கு ஆலை அமைப்பதற்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை எஸ்ஸார் குழுமம் முதலீடு செய்ய உள்ளது. சவுதி அரேபியா ரியால் மதிப்பில் இது 15 பில்லியன் ஆகும். தற்போது தொடங்கப்பட்டு, இது 2025 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை எஸ்ஸார் நிறுவனத்தின் பொது மேலாளர் அமர் கபாடியா தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ராஸ் அல் கயிர் என்ற தொழில் நகரத்தில் ஒரு மில்லியன் டன் அளவிலான காயில், டின் தட்டு, 4 மில்லியன் டன் அளவிலான தட்டை எக்கு ஆலை ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதில், 2.5 மில்லியன் டன் வருடாந்திர திறன் கொண்ட இரண்டு இரும்பு ஆலைகளும் இயக்கப்பட உள்ளன. இதற்காக, எஸ்ஸார் நிறுவனம், சவுதி அரேபியாவின் தேசிய தொழில் துறை வளர்ச்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன், ராயல் கமிஷன் ஃபார் ஜுபைல் மற்றும் யான்போ உடன் நிலம் கையகப்படுத்துதல் குறித்த ஒப்பந்தத்திலும் ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல்களை முறையாக பெற்றுள்ளதாக அமர் கபாடியா தெரிவித்தார். மேலும், அடுத்த சில மாதங்களில், அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார். எஸ்ஸார் நிறுவனத்தின் வருடாந்திர டர்ன் ஓவர் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்திய வங்கிகளில், நிறுவனத்திற்கு இருந்த சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கடனை, நிறுவனம் திருப்பி செலுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.














