கடந்த ஜூலை 5, 2023 ஆம் ஆண்டுடன் ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சக்தி வாய்ந்த ராக்கெட்டான ஆரியான் 5 நிறைவு பெற்றது. ஆரியான் 5 ஏவுகலனுக்கான மாற்று ஏவுகலனாக ஆரியான் 6 தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2014 முதல் நடைபெற்று வரும் இந்த பணி, பல்வேறு கட்ட தாமதங்களுக்கு பிறகு தற்போது முழுமை அடைந்துள்ளது. இன்று இரவு 8:30 மணிக்கு சோதனை முயற்சியாக ஏவப்படுகிறது.
தென் அமெரிக்காவில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து ஆரியான் 6 ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் சுமார் 63 மீட்டர் உயரமாகவும், 860 டன் எடை கொண்டதாகவும் உள்ளது. கிட்டத்தட்ட 3.6 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு முறை இந்த ராக்கெட்டை செலுத்துவதற்கு 115 மில்லியன் யூரோக்கள் செலவிட வேண்டும் என கூறப்படுகிறது.