உலக அளவில் பிரசவம் மற்றும் குழந்தை பிறப்பு குறித்து ஐநா சபை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு பிரசவ உயிரிழப்பு நேர்வதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டுமே, உலக அளவில், 287000 பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள், அதீத ரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம், கருத்தடை சிக்கல்கள் மற்றும் இதர மகப்பேறு தொடர்பான நோய்கள் காரணமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரசவம் நேர்ந்த பகுதிகளில், உரிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் உயிரிழப்புகளை பெருமளவு தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கருவுற்ற பெண்களுக்கு தரமான மற்றும் சரியான மருத்துவ வசதிகளை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போதிய மற்றும் தரமான மருத்துவ பணியாளர்கள், மருந்துகள் இருப்பு மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது போன்றவற்றை செயல்படுத்துவதால் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.