மாமல்லபுரம் - குமரி கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதி தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் 697 கிமீ பகுதி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பிக்களான, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுகவின் எம்.சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது பதிலில், மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை 4 வழிப்பாதையாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.24,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இணைப்பு சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாலங்கள் உள்ளிட்டவை எங்கு தேவையோ அவை விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் வாகனம் மற்றும் பாதசாரிகளின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் என்றார்.