கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் ஆகியோருக்கு கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் மூலம் பெறும் வசதி கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 7.9.2023 அன்று இந்த சேவை அறிமுகமானது. பயனாளிகள் எந்த சிரமமும் இன்றி, அருகிலுள்ள அரசு இ-சேவை மையம் அல்லது www.tn.e.sevai இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயண அட்டைகளை பதிவிறக்கம் செய்து பயன் பெற முடிகிறது.
இந்நிலையில், 2025-26 நிதியாண்டில் பயண அட்டைகளை இணையதளம் மூலம் புதுப்பிக்க வசதியாகவும், இந்த திட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், மேற்கண்ட பயண அட்டைகளை 2025 மார்ச் 31 வரை பயன்படுத்த முடியும். அதே நேரத்தில், பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த அட்டைகளை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30, 2025 வரை நீட்டிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.