வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்தும் நிறுவனங்கள் தங்கள் கணக்கினை சார்ட்டட் அக்கவுன்டன்ட் மூலம் தணிக்கை செய்ய வேண்டும். 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நேரடி வரிகள் வாரியம் கூறியிருந்தது. தணிக்கை அறிக்கையை காலக்கெடுவுக்குள் உருவாக்காவிட்டால், தாமதத்திற்கு மொத்த விற்பனை வருவாய் அல்லது மொத்த வணிக ரசீதுகளில் 0.5 சதவீதம் அல்லது ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்நிலையில் வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என்று பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் கடைசி தேதியான செப்., 30 அன்று மாலை மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் மற்றும் பிறர் பிரச்னைகளை எதிர்கொண்டதை கவனத்தில் ஏற்று 2022 - 23 மதிப்பீட்டு ஆண்டிற்கான பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 வரை நீட்டித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.