விவசாயிகள் 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், தயா சங்கர் லால் ஸ்ரீவத்சவா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள காரணத்தால் வெவ்வேறு நிலைகளில் உள்ள சம்பா பருவ நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வருகிற 15-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுங்கள்.
தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புயல், வெள்ளத்தினால் பயிர் சேதம் அடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது. எனவே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














