பிஹார் மாநிலத்தில், கங்கை நதிக்கு மேலே, அகுவானிகாட் மற்றும் சுல்தான்கஞ்ச் பகுதிகளை இணைக்கும் வகையில், புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் நேற்று இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்தது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. பாலம் இடிந்து விழும் காணொளி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது. இந்த நிலையில், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “இந்த பாலம் ஏற்கனவே கடந்த ஆண்டு இடிந்து விழுந்திருக்கிறது. மீண்டும் இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு தவறான வடிவமைப்பே காரணம். சரியான திட்டமிடல் இல்லாமல் பாலம் கட்டப்பட்டதால் இவ்வாறு நேர்ந்துள்ளது. இது தொடர்பாக, குறிப்பிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். அதே வேளையில், பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “திட்டமிடப்பட்டு இந்த பாலத்தின் இடிப்பு நிகழ்ந்தது. கடந்த ஆண்டு, இடி மின்னலில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததால், பாலத்தை இடிக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இந்த முரண்பாடான கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினரை குற்றம் சாட்டி வருகின்றனர்.














