கடந்த 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடு 4442 கோடி டாலர்கள் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில் 4603 கோடி டாலர்களாக இருந்தது. அதன்படி, கடந்த நிதி ஆண்டில் 3.49% முதலீடு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 2022ஆம் ஆண்டு நேரடி அந்நிய முதலீடு உச்சத்தை பதிவு செய்தது. அப்போது, 8483 கோடி டாலர்கள் அளவில் முதலீடு பதிவானது. அதன் பிறகு அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில், ஜெர்மனி, சிங்கப்பூர், மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ், கேமன் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் முதலீடுகள் குறைந்துள்ளது. அதே வேளையில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் முதலீடுகள் அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக 1510 கோடி டாலர்கள் மதிப்பில் அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது.