விபத்துகளில் மரணம் அடையும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 8 அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தினால் உயிர் இழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும். ரூ.18.70 கோடியில் 27 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் புதுப்பிக்கப்படும். மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4.74 கோடி செலவில் திறன் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.