கடந்த வாரம், அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்த நிலையில், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட சிக்னேச்சர் வங்கி மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்த வங்கியின் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்து, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால். வங்கியின் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே, வாடிக்கையாளர்களின் முதலீடுகளை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க நிதித்துறை, பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் வைப்பு நிதி காப்பீட்டுக் கழகம் ஆகியவை உறுதி அளித்துள்ளன.
அமெரிக்க வரலாற்றில் இது மிக முக்கிய வங்கித் துறை நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. வங்கிகள் தொடர்ச்சியாக திவால் ஆகி வருவதால், பொதுமக்கள் வங்கிகளில் உள்ள தங்கள் வைப்பு நிதிகளை எடுத்து வருகின்றனர். எனவே, அனைத்து வங்கிகளுக்கும் கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.