கேரளாவில் உள்ள கண்ணூர் ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகியூடிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து நேர்ந்துள்ளது. இன்று அதிகாலை 1.25 மணி அளவில் விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் தீப்பற்றி எரிவதை கண்டவுடன், தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைத்தனர். இந்த விபத்தின் போது, ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீயை முற்றிலுமாக அணைப்பதற்கு முன், ரயிலின் 3 பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன. மேலும், தீ விபத்து நேர்ந்த கண்ணூர் ரயிலுக்கு அருகில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிபொருள் டேங்கர் ரயில் நின்று கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக, தீ அருகில் இருந்த எரிபொருள் ரயிலுக்கு பரவவில்லை என்பதால், மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கேரளாவில், கடந்த ஏப்ரல் மாதம், இதே கண்ணூர் ரயிலில் 3 பேர் தீ வைத்து கொலை செய்யப்பட்டனர். எனவே, இது சதி செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் கேரள காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.