தீயணைப்பு துறை அதிகாரிகள் பண்டிகை கால பட்டாசு கடைகளை திறப்பதற்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பண்டிகை நேரத்தில் பட்டாசு கடை தற்காலிகமாக திறக்கப்பட்டு வருவது வழக்கமாகும். இதற்காக பட்டாசு வியாபாரிகள் தீயணைப்பு துறையில் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்று வாங்குவது கட்டாயம் ஆகும். இந்த ஆண்டு பட்டாசு கடைகளை திறக்க வியாபாரிகள் அனுமதி விண்ணப்பித்து வருகின்றனர். இதில் கான்கிரீட் போட்ட கட்டிடங்களுக்கு மட்டும் தீயணைப்பு துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.
மேலும் தகர ஷீட் போட்ட கடைகளுக்கு அனுமதி வழங்க இயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் 1500 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். கடந்த 25 வருடங்களாக பட்டாசு கடை நடத்தி அதற்கான லைசென்ஸ் உள்ளதாகவும் இந்த முறை தீயணைப்பு துறை அதிகாரிகள் புதிய நிபந்தனை விதித்து வருவதாகவும் வியாபாரிகள் கூறி வருகின்றனர். சென்னையில் 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 300 கடைகளுக்கு மட்டுமே லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1500 மேற்பட்ட கடைகளுக்கு லைசன்ஸ் வழங்கவில்லை. தமிழக முழுவதும் 5200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் விரைவில் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தீயணைப்பு துறை இணை இயக்குனர் இன்று முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.