ஜெர்மனியில் இருந்து எகிப்து நோக்கி பயணமான சரக்கு கப்பலில், நெதர்லாந்து அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
சுமார் 3,000 கார்களை ஏற்றிச் சென்ற பிரீமேன்ட்டில் ஹைவே என்ற சரக்கு கப்பல், நெதர்லாந்து கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் 25 மின்சார கார்கள் இருந்ததாகவும், அவற்றில் ஒரு கார் தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பலில் இருந்த மற்ற கார்களுக்கும் தீ வேகமாக பரவியதை அடுத்து, கப்பல் பணியாளர்கள் 16 மணி நேரம் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனாலும், தீயை அணைக்க முடியவில்லை. விபத்து குறித்து நெதர்லாந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரக்கு கப்பலில் 23 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. கப்பல் தீப்பிடித்து எரிந்ததால், பணியாளர்கள் கடலில் குதித்துள்ளனர். நெதர்லாந்து கடலோர காவல் படையினர், பெரும்பாலானோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.