நாட்டிலேயே முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கு அங்கன்வாடியுடன் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் நாட்டிலேயே முதல் முறையாக தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
பின்னர் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரகாண்டில் புதிய கல்விக் கொள்கை சிறப்பாகச் செயல்படுத்தப்படும். குழந்தைகளை 100 சதவீதம் அங்கன்வாடிகளில் சேர்ப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும். திறமை மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய கல்வி கொள்கையின் கீழ் மூன்று வயதுடைய குழந்தைகள் அங்கன்வாடிகளில் சேரலாம். உத்தரகாண்டில் 40 லட்சம் பேருக்கு தரமான கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையின் கீழ் புதிய வலிமையான, தற்சார்பு இந்தியா உருவாக்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.