உலகிலேயே முதல்முறையாக, நீதிமன்றத்தில் வாதாட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய வழக்கு விசாரணையில் இந்த ரோபோ பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த ஜோஸ்வா ப்ரவுடர் என்ற இளைஞர், 'டு நாட் பே' என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர், இந்த ரோபோவை உருவாக்கி உள்ளார். அமெரிக்க சட்டவிதிகளுக்கு உட்பட்டு இந்த ரோபோ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு எதிராக சாமானிய மக்களால் பெரும் தொகை செலவழித்து நீதிமன்ற வழக்குகளை நடத்த முடியவில்லை. அவர்களுக்காக குறைவான மாத சந்தா அடிப்படையில் சட்ட ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். இந்நிலையில், எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்காக முதல் முறையாக ரோபோ வழக்கறிஞரை அறிமுகம் செய்ய உள்ளோம். ஒருவேளை இந்த வழக்கில் அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் எங்கள் நிறுவனமே அதை ஏற்றுக் கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.














