பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியாளர் மாநாடு நாளை நடக்கிறது.
இது தொடர்பாக, கர்நாடக மீன்வளத்துறை அமைச்சர் அங்காரா கூறுகையில், விவசாயிகள், மீன்பிடி விவசாயத்தில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியில் மேம்படும் நோக்கில் உள்நாட்டு மீன் உற்பத்தியாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. கர்நாடகாவில், 234க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீன் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 34 வகைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாநாட்டில் புதிய தொழில்நுட்பம், உற்பத்திக்கான உபகரணங்கள், சந்தைப்படுத்துதல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தகவல் அளிக்கப்படும்.
மாநாட்டை, முதல்வர் பசவராஜ் பொம்மை நாளை துவக்கி வைக்கிறார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, மீன்வளத்துறை இணை அமைச்சருமான எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மீன் உற்பத்தியில் நாட்டிலேயே கர்நாடகா 3ம் இடத்தில் வகிக்கிறது. மீன்வளத்துறையில் மூன்று ஆண்டுகளில் 760 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.