காய்ச்சல் வருவதால் உடலில் மறைமுகமாக பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக, ஆல்பர்டா பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடனடியாக சிகிச்சை அளிக்காத, மிதமான காய்ச்சலால், உடலின் பல்வேறு ஆற்றல்கள் புதுப்பிக்க படுவதாகவும், காயங்கள் மற்றும் திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் துறை நிபுணர் டேனியல் பரட்டா, இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“காய்ச்சல் ஏற்படும் போது, அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால், உடலுக்கு சிக்கல்களை சுயமாக சரி செய்யும் நிலை உண்டாகும். மருந்துகள் இல்லாமலேயே காய்ச்சலை குணப்படுத்தும் திறன் ஏற்படும். மாறாக, வீரியமிக்க மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்வதால், உடலின் நோய் எதிர்ப்பாற்றல் செயல்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, காய்ச்சலை இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் மூலம் குணப்படுத்த வேண்டும்” என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அத்துடன், விலங்குகளுடன் ஒப்பிட்டு, “விலங்குகளுக்கு காய்ச்சல் போன்ற தொந்தரவு ஏற்படும் பொழுது அமைதியாக ஓய்வெடுத்து சரி செய்து கொள்கிறது. அதைப்போலவே மனிதர்கள் செயல்பட வேண்டும். மருந்துகளுக்கான அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.














