ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, 169 இந்தியர்கள் இடம் பெற்ற நிலையில், எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டில், புதிதாக 25 இந்தியர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 200 இந்தியர்களின் சொத்து மதிப்பு மட்டுமே கிட்டதட்ட ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 116 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இரண்டாம் இடத்தில், 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி உள்ளார். உலக அளவில் இவர்கள் இருவரும் முறையே 9 மற்றும் 17வது இடங்களில் உள்ளனர். இந்திய அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட பெண்ணாக சாவித்திரி ஜிண்டால் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.