பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்த 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை அடைய வெளிநாட்டு வர்த்தகம் இந்தியாவுக்கு உதவும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்திய பொருளாதாரம் உயர வெளிநாட்டு வர்த்தகம் முக்கிய அம்சமாக மாற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரீன் டிரேட் மாணவர்களிடையே உரையாற்றிய கோயல், 'கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அமெரிக்க டாலரில் (USD) 11.8 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இது இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் வலுவான நிதி நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அதோடு கட்டமைப்பு ரீதியாக வலுவானதாக ஆக்கியுள்ளது.
உலகம் இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரமாக அங்கீகரித்து, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தீர்க்கமான தலைமையின் காரணமாக இங்கு முதலீடு செய்ய எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒத்துழைப்பு உணர்வில் ஒன்றிணைந்து செயல்படுவதை அவர்கள் காண்கின்றனர். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு இளம் தலைமுறையினரிடம் உள்ளது என்றார்.
மேலும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் (IIFT) காக்கிநாடாவை இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் ஒரு முக்கிய அடையாளமாக கோயல் குறிப்பிட்டார். ஏனெனில் அத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் மனித திறமைகள் தேவையான ஒன்று என்றார்.
உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்குமாறு பார்வையாளர்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்தியாவை மீண்டும் ஒரு உலக வல்லரசாக உருவாக்க இளம் மாணவர்கள் கூட்டாக உழைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.