கிரீஸ் நாட்டில் உள்ள டாடியா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 20 பேர் உடல் கருகி இறந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை உருவாகியுள்ளது. இத்தகைய வறண்ட சூழ்நிலைகள் காரணமாக பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ பரவி உள்ளது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயின் தாக்கம் நீடிக்கிறது. குறிப்பாக வடகிழக்கு பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், வடமேற்கு பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 20 பேர் உடல் கருகி இறந்துள்ளனர். அப்பகுதியில் வசிப்பவர்கள் யாரும் காணாமல் போனதாக புகார் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இவர்கள் சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய மக்கள் செல்வதற்கான வழியாக உள்ளது. எனவே இறந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.














