இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86 வது வயதில் இன்று மரணித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு, ஏற்கனவே லுக்கிமியா இருந்ததாகவும், இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தவிர, அவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அத்துடன், 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவர் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், பொதுமக்கள் முன்னிலையில் வருவதை தவிர்த்து வந்தார்.
சில்வியோ பெர்லுஸ்கோனி, 3 முறை இத்தாலியின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2011 வரை, 9 ஆண்டுகள் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இத்தாலியின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதாக கருதப்பட்டு, அவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலி கடன் சுமையில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர, பல்வேறு சட்டம் மற்றும் பாலியல் சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார். எனினும், இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலி முக்கிய மாற்றங்களை அடைந்தது குறிப்பிடத்தக்கது.