சென்னையில் நடைபெறும் ஃபார்முலா போர் கார் பந்தய டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெறுகிறது. இதை சென்னை மாநகராட்சி,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் ஃப்ரோமோ பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதற்கு சென்னை தீவு திடலை சுற்றி உள்ள 3.5 கிலோமீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக இவை நடத்தப்பட உள்ளது. மேலும் தெற்காசியாவில் முதல் முறையாக இந்த கார் பந்தயம் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயங்களுக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் பே டி எம் இன்சைடர் மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. கிராண்ட் ஸ்டாண்ட் ரூபாய் 1000 ,பிரீமியம் ரூபாய் 4000, கோல்டு ரூபாய் 7000, பிளாட்டினம் ரூபாய் 10500 என டிக்கெட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.