பசுமை ஹைட்ரஜன் துறையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டு திட்டத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, புதுடெல்லியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் வளர்ச்சி மேம்பாடு மற்றும் சர்வதேச பங்களிப்பு துறையின் அமைச்சர் Chrysoula Zacharopoulou மற்றும் இந்தியாவின் எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் அமைச்சர் ஆர் கே சிங் ஆகியோர் இதற்கான திட்ட வரைவுகளை வெளியிட்டனர்.
இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பசுமை ஹைட்ரஜன் மூலம் கார்பன் உமிழ்வை பெரும் அளவு கட்டுப்படுத்த முடியும் என்பதை பிரான்ஸ் மற்றும் இந்தியா நாடுகள் நம்புகின்றன. கடந்த மே 4ம் தேதி, பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாடுகளும் இணைந்து பசுமை ஹைட்ரஜன் துறையில் பணியாற்றுவதன் அவசியத்தை முன்மொழிந்தனர். அதன் வழியாக, இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் ஒருங்கிணைந்து செயல்படும். கார்பன் இல்லாத ஹைட்ரஜன் துறையில் இரு நாடுகளும் உலக அரங்கில் முன்னணி வகிக்கும். விரைவில் இந்த இலக்கை இருநாடுகளும் எட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் அமைச்சர் Chrysoula Zacharopoulou, இந்தத் திட்டத்தில் இந்தியாவுடன் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “இனி வரும் வாரங்களில், இரு நாடுகளும் கார்பன் உமிழ்வு குறித்த பெரும் செய்தியை உலகிற்கு எடுத்துரைக்க உள்ளன. அதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து தேவைப்படும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான அறிவு சார் பகிர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறினார்.