அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறை கேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு, "ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியா மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சி மீதான தாக்குதல்" என்று அதானி குழுமம் பதில் அளித்துள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம், "தேசிய வாதத்தின் பெயரில் அதானி குழுமம் தான் செய்த தவறுகளை மறைக்க முடியாது" என பதிலடி கொடுத்துள்ளது.
ஹிண்டன்பர்க் அளித்துள்ள பதில் அறிக்கையில், "அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கையை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்தியா வல்லரசாக உருவெடுக்கக்கூடிய வகையில் வலிமை பெற்ற மற்றும் வளமான, ஜனநாயக நாடு. ஆனால், இந்தியாவின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுக்கிறது என நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமம் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு, தேசத்தை சூறையாடி கொண்டிருக்கிறது. உலகின் பெரும் பணக்காரர்கள் மோசடி செய்தாலும், அதை மோசடி என்று தான் குறிப்பிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு பின்னர், அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.