பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13 ஆயிரம் கோடி மோசடி செய்த மெகுல் சோக்சியின் சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் மெகுல் சோக்சிக்கு எதிராக அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு தப்பிய சோக்சி, தற்போது ஆன்டிகுவாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மோசடி தொடர்பாக வழக்கு, மும்பையில் உள்ள சிறப்பு பண மோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பரிசீலனையில் உள்ளது. மெகுல் சோக்சிக்கு எதிராக 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவரது ₹2,565 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த சொத்துக்களை விற்பனை செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி, ₹2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த சொத்துகளுக்கு மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அடங்கும்.