கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, தற்போது தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மாறியுள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் வானிலை மையம் இன்னும் மழை பெய்யும் என எச்சரிக்கையளித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக, முதல்வர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அம்மா உணவகங்களில் இலவச உணவுகளைப் பெற முடியும் என அறிவித்துள்ளார். மேலும் அங்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தேவையான உதவிகளை அரசு வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.