கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நைஜர் நாட்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அங்கு உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்றது. இதன்போது, நைஜர் நாட்டு ராணுவத்துடன் இணைந்து பிரான்ஸ் ராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது, பிரான்ஸ் ராணுவம், நைஜர் நாட்டில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர், நைஜர் நாட்டில் இருந்து பிரான்ஸ் படையினர் வெளியேறி வருவதை உறுதி செய்துள்ளார். தற்போதைய நிலையில், 2 விமானங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரான்ஸ் ராணுவத்தினர் நாடு திரும்பி உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நைஜரில் உள்ள அனைத்து பிரான்ஸ் ராணுவத்தினரும் தாயகம் திரும்புவர் என உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், பிரான்ஸ் படையினர் நைஜரிலிருந்து வெளியேறுவது, நைஜர் நாட்டில் பயங்கரவாதத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.