3 வகைகளில் சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தை மார்ச் 1-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க தமிழக அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்ற 'பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்புத் திட்டம்' மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. அதன்படி, இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் கூடுதல் சுவை, புரதச்சத்து விகிதத்தை அதிகரித்து வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் மாவு பாக்கெட்டுகள் வகை பிரித்து வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மார்ச் 1-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.