ஆக.15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பதிவேற்றம் செய்ய மொழிபெயர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ஆங்கிலத்தில் வெளியாகும் தீர்ப்புகளை 99.9% மக்களால் எளிதாக புரிந்துகொள்ள முடிவதில்லை. உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ, பொதுமக்கள் பேசக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளில் தீர்ப்புகளை வழங்கவில்லை என்றால், நீதித் துறையின் சேவை அர்த்தமற்றதாக ஆகிவிடும். எனவே, ஆங்கிலத்தில் வெளியாகும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வரும் ஆகஸ்ட்.15-ம் தேதி முதல் தமிழ், இந்தி, குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்புகளை மொழிபெயர்ப்பது தொடர்பான பணிகளை கவனிக்க நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.