குழந்தைகள் உணவான செர்லாக்கில் சர்க்கரை இடுபொருள் கூடுதலாக சேர்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக ஆய்வு நடத்த தேசிய அளவில் மாதிரிகளை சேகரித்து வருகிறது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த சர்வதேச குழந்தைகள் உணவு பொருள் கண்காணிப்பு அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நெஸ்ட்லே நிறுவனம் சார்பில் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும் செர்லாக் உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது இந்தியா உட்பட குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் செர்லாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள்கள் இடம் பெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செர்லாக் உணவில் உள்ள இடு பொருள்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ள உணவு தர நிர்ணய ஆணையத்திற்கு மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியது. தற்போது தேசிய அளவில் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் நிறைவடைந்து விடும் என்று உணவு தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் ஜி. கமலவர்த்தன ராவ் செய்தியாளர்களிடம் கூறினார்.














