சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கொழும்பு நகரின் லோட்டஸ் டவர், நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. முன்னதாக, லோட்டஸ் டவர் மூன்று கட்டமாக திறக்கப்படும் என்று இலங்கை ஊடகங்கள் அறிவித்திருந்தன. அதன்படி, முதல் கட்டமாக, Nelum Kuluna என்று அழைக்கப்படும் லோட்டஸ் டவரின் பகுதி திறக்கப்பட்டுள்ளது. இது, 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் 80 சதவீதத்தை சீனா அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லோட்டஸ் டவரின் இரண்டாம் பகுதி அடுத்த இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், இணைய விளையாட்டு மையங்கள் மற்றும் டிஜிட்டல் மியூசியம் போன்றவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. லோட்டஸ் டவரின் மூன்றாம் பகுதி, அடுத்த வருட மார்ச் மாதத்தில் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஒன்பது பரிமாண திரையரங்கம், சுழல் உணவகங்கள் போன்றவை இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் டவர் நிர்வாகத்தின் தலைவர் ரிடையர்ட் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
லோட்டஸ் டவர் கட்டிடம், 30600 சதுர மீட்டர் பரப்பளவில், சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 350 மீட்டர் உயரத்தில், 17 மாடிகளுடன் இது கட்டப்பட்டுள்ளது. தற்போது, திறக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பகுதியைக் காண, வார நாட்களில், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், வார இறுதி நாட்களில், நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு, கட்டணத்தில் சலுகை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














