இங்கிலாந்தை தாயகமாகக் கொண்ட ஜி. யு. போப் 1820ம் ஆண்டு கனடாவில் பிறந்தார். பின்னர் இங்கிலாந்தில் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்தார். தனது பத்தொன்பதாவது வயதில், விவிலிய நூற்கழகத்தின் மதபோதகராக, எட்டு மாதங்கள் பயணப்பட்டு, தமிழகம் வந்தடைந்தார். அந்த எட்டு மாதங்களிலேயே தமிழை முழுமையாகக் கற்றுக் கொண்டார். தமிழின் ஆழத்தையும் தொன்மையையும் அறிந்த அவர், சமயப் பணி மட்டுமல்லாது, தமிழ்ப் பணியும் சேர்ந்தே செய்யத் துவங்கினார். ஒரு தமிழ் மாணவனாக ஆரம்பித்து ஒரு தமிழ் அறிஞராக வளர்ந்து, தமிழையும் வளர்த்தவர் ஜி. யு. போப் ஆவார். மாணவர்களுக்காக எளிமையான தமிழ் இலக்கண நூல் ஒன்றை வெளியிட்டார். தமிழ் அறியாத மக்களும் தமிழ் இலக்கணம் பயிலும் வகையில் எழுதி இருந்தார். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்க தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் இவர் இயற்றிய நூலை தமிழ் அறியாதோரும் கற்க இயலும். இந்த நூல் வினாவிடை வடிவத்தில் இயற்றப்பட்டது.
எடுத்துக்காட்டு:
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
12
மெய் எழுத்துக்கள் எத்தனை?
18
"இலக்கண வினாவிடை" எனும் இந்த நூலின் எளிமை காரணமாகத் தமிழ் மொழி பல்வேறு தரப்பட்ட மனிதர்களையும் சென்று சேர்ந்தது.
திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்ற வியத்தகு மொழிபெயர்ப்புகள் அவர் இங்கிருந்து விடைப் பெற்று இங்கிலாந்து சென்ற பிறகு எழுதியவை. புறப்பொருள் வெண்பா மாலை மற்றும் புறநானூறு ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். அவர் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைக் கற்பிக்கும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
அவர் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு. ஒருமுறை காந்தியடிகள் லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதத்தில் "எனக்கு மனக்குழப்பம் நேரும் பொழுதில் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறீர்கள்? " என்று கேட்டிருந்தார். அதற்கு லியோ டால்ஸ்டாய் "இந்துவுக்கு ஒரு கடிதம்" என்ற பெயரில் பதில் அனுப்புகிறார். அதில் "உங்கள் இந்தியாவைச் சேர்ந்த தமிழகத்தில் திருக்குறள் என்ற நூல் ஒன்று உண்டு. அதன் மொழி பெயர்ப்பை நான் படித்திருக்கிறேன். அதை நீங்கள் கற்றால் உங்கள் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் " என்று எழுதி இருக்கிறார். லியோ டால்ஸ்டாய் கற்றதாக சொன்ன மொழிமாற்று திருக்குறள், திரு. ஜி. யு. போப் அவர்களால் இயற்றப்பட்டது.
ஒருமுறை ஜி. யு. போப் அவர்கள், திரு. உ.வே. சா. அவர்களுக்கு திருவாசகத்தைப் பற்றிக் கடிதம் எழுதுகிறார். அப்பொழுது ஏற்பட்ட உருக்கத்தினால் பெருகிய கண்ணீரால், கடிதம் ஈரமானது. அந்தக் கடிதம் ஒரு பொக்கிஷம் என்று பாதுகாக்கப் பட்டு வருகிறது. உ.வே. சா.வின் பவள விழா அன்று வெளியிட்ட புத்தகத்தில் இந்தக் கடிதம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.
தனது கல்லறையில் என்ன வைக்க வேண்டும் என்று நெருங்கியவர்கள் கேட்டபோது, தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசக நூல்களும், தாமிரபரணி நீரும் வைக்கச் சொன்னதாகத் தகவல்கள் உண்டு.
தனது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும் என்பதே அவரது இறுதி ஆசையாக இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் தனது கல்லறையில், “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அவர் 1908ம் ஆண்டு இறந்தார். அவரது கல்லறை ஆக்ஸ்போர்டு நகரில் உள்ளது. அவரது கல்லறையில் அவர் கூறிய வாசகங்கள் உண்மையில் இடம் பெறவில்லை. ஆனால் தமிழ் நெஞ்சங்களில் இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.














