இந்தியா தலைமையில், புதுடில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவு பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஜி-20 மாநாட்டுக்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜி 20 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. மேலும், மாநாட்டின் தலைமை பொறுப்பு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்த நிலையில், இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்தது. தற்போது, தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஜி 20 மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் லூலா தாசில்வாவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். மேலும், பிரேசிலுக்கு தேவையான அனைத்து தரப்பு ஆதரவையும் இந்தியா வழங்கும் என உறுதி அளித்துள்ளார். அதே வேளையில், நடப்பு மாநாட்டில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகளை அடுத்த இரண்டரை மாதங்களுக்கு இந்தியா பொறுப்பேற்று நடத்தி வைக்கும் என தெரிவித்துள்ளார்.