மேற்கத்திய நாடுகளில் உள்ள ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து உக்ரைனுக்கு 50 பில்லியன் டாலர் அளிக்க ஜி7 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜி 7 நாடுகளின் மாநாடு இத்தாலியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கத்திய நாடுகளில் உள்ள ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு 50 பில்லியன் டாலர் கடனுதவி அளிக்கப்பட உள்ளது. போரினால் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது ராணுவத்தை பலப்படுத்திக் கொள்ள இந்த உதவி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்ய மத்திய வங்கியின் பணம் மேற்கத்திய நாடுகளில் கிட்டதட்ட 280 பில்லியன் அளவுக்கு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அவை முடக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.
இந்த பணம் ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் இதன் உறுப்பு நாடுகள் இந்த பணத்திற்கான வட்டியை உக்ரைனுக்கு நிதி உதவியாக அளிக்க அனுமதி வழங்கின. இன்னும் சில மாதங்களில் இந்த கடன் வழங்கப்படும் என தெரிகிறது. வட்டி பணம் மட்டுமல்லாமல் ரஷ்யாவின் முழு சொத்துக்களையும் நிதி உதவியாக அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.