உலகப் பணக்காரர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இருந்து கௌதம் அதானி வெளியேறி உள்ளார். விரைவில் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தையும் அவர் இழக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
ப்ளூம்பெர்க் பட்டியலில் உலகின் 4வது பணக்காரராக இருந்த கௌதம் அதானி, 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு, மூன்றே நாட்களில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், அவரது சொத்து மதிப்பு 84.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் பதிவாகியுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில், அவரது போட்டியாளராக கருதப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு 82.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
கௌதம் அதானியின் அதானி என்டர்பிரைசஸ் குழுமம், பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து, கடந்த வாரம் முதல், அவரது சொத்துக்கள் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும், நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.














