வெளிநாட்டினர் மற்றும் காயமுற்றவர்கள் வெளியேற நேற்று காசா எல்லை திறக்கப்பட்டது.
காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் காசா பகுதி சீர்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் முகாம்களை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைகள் படை எடுத்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக கட்டிடங்கள் பலத்த சேதம் அடைகின்றன. அதோடு சில சமயம் தவறுதலாக ஏவுகணைகள் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர். பலர் காயம் அடைகின்றனர். அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லை. இந்த சூழ்நிலை கடந்த 25 நாட்களாக தொடர்கிறது. இதிலிருந்து பொதுமக்கள் வெளியேறி செல்ல நேற்று காசா எல்லை திறக்கப்பட்டது.
வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பலத்த காயமுற்றோர் அந்த எல்லை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர். எனினும், வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து தெரியவில்லை. இருந்தபோதிலும் போருக்கு மத்தியில் இது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. முன்னதாக வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்தனர்.