ஜெர்மன் நாட்டின் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகை தந்துள்ளார். அவரை, ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விமான நிலையத்தில் வரவேற்றார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை மூலம் இரு தரப்பு உறவு வலுப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று கருதப்படுகிறது.
இன்று ராஷ்டிரபதி பவனில், பிரதமர் நரேந்திர மோடி, அவரை முறைப்படி வரவேற்றார். இவர்களது சந்திப்பின்போது, பசுமை எரிசக்தி, பாதுகாப்பு, இருதரப்பு வணிகம் மற்றும் முதலீடுகள், புதிய தொழில்நுட்பங்கள் போன்ற பல்துறை சார்ந்த கலந்துரையாடல் நிகழும் என்று வெளியுறவுத்துறை சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ், "இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கியமாக உள்ள பல தலைப்புகள் குறித்து இந்தப் பயணத்தில் விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.














