ரஷ்ய பகுதிகளில் ஜெர்மன் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜெர்மன் அரசின் செய்தி தொடர்பாளர் நேற்று பெர்லினில் அறிக்கை வெளியிட்டார்.
ரஷ்ய பகுதியில் உக்ரைன் தனது ஆதரவு நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் ஆயுதங்களை பயன்படுத்த விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டன. பல நாடுகள் தாங்கள் அளிக்கும் ராணுவ ஆயுதங்களை உக்ரைன் பிராந்தியத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தன. இதற்கு காரணம் ரஷ்யாவுடனான மோதல் விரிவடைவதை தவிர்ப்பது தான். அதோடு உக்ரைனின் நட்பு நாடுகள் நேரடியாக இந்த போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை.
ஆனால் இந்த கட்டுப்பாடுகளை ரஷ்யா தனக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டு எல்லைக்கு அருகில் படையெடுத்து வருகிறது என்று உக்ரைன் குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் ஜெர்மன் தனது ஆயுதங்களை ரஷ்ய பகுதியில் உக்ரைன் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.