ஜெர்மனி நாட்டில் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது, சனிக்கிழமை முதல், எஞ்சியுள்ள 3 அணுமின் நிலையங்களும் மூடப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக. ஐரோப்பாவில் எரிபொருள் நெருக்கடி நிலவுகிறது. ஆனாலும், தனது பசுமை சூழல் குறித்த இலக்குகளை நோக்கி ஜெர்மனி பயணித்து வருகிறது. எனவே, அணுமின் நிலையங்களை மூட உள்ளதாக கூறியுள்ளது. மேலும், தனது எரிபொருள் இலக்குகளை அணுமின் நிலையங்கள் இல்லாமலேயே பூர்த்தி செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரிடர், அணுமின் நிலையங்கள் குறித்த விவாதங்களை ஏற்படுத்தியது. அப்போது முதல், ஜெர்மனி, தன் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை மூடுவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக, செர்னோபில் அணு உலை விபத்து காரணமாக பொதுமக்கள் அணுமின் நிலையங்கள் குறித்த அச்சத்தில் இருந்தனர். எனவே, 2003 ஆம் ஆண்டு முதல், அணு உலைகளை மூடுவதில் ஜெர்மனி ஈடுபட்டு வருகிறது. ஜெர்மனியில் தற்போது வரை 16 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன.














