கடந்த 2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவி வகித்தார். கடந்த 50 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த மாதத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார். அதன் பின்னர், பொதுமக்களிடையே உரையாற்றும் பொழுது, புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான பெயர் மற்றும் கொடியை பொதுமக்களே வடிவமைப்பர் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று, புதிய கட்சி தொடங்கியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, புதிதாகத் தொடங்கப்படும் கட்சிக்கு இந்திய சார்பிலான பெயர் வைக்கப்படும் என்று ஆசாத் தெரிவித்திருந்த நிலையில், புதிய கட்சிக்கு, டெமாக்ரடிக் ஆசாத் பார்ட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த கட்சியின் கொடி இன்று வெளியிடப்பட்டுள்ளது. தனது புதிய கட்சி, ஜம்மு காஷ்மீரில் முழு மாநில சுய ஆட்சி, நில உரிமை மற்றும் சொந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு உழைக்கும் என்று ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், குலாப் நபி ஆசாத்தின் புதிய கட்சி அறிவிப்பு அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதற்காக தன்னையும் தனது ஆதரவாளர்களையும் அந்த கட்சியினர் ட்விட்டரில் மோசமாக விமர்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து, “காங்கிரஸ் கட்சி எங்கள் இரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கம்ப்யூட்டர்களாலோ ட்விட்டர் பதிவுகளாலோ அல்ல. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் கம்ப்யூட்டர் வாயிலாக எங்களை விமர்சித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், சோனியா காந்திக்கு அவர் சமர்ப்பித்துள்ள 5 பக்க நீண்ட ராஜினாமா கடிதத்தில், அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, ராகுல் காந்திக்கு கட்சியின் தலைமை பொறுப்பை வழங்குவதை நோக்கியே கடந்த 9 வருடங்களாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.














