இத்தாலியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவில் வலதுசாரி கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. அதன்படியே, தற்போது, வலது சாரி கட்சி வென்றுள்ளது. மேலும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இத்தாலியில் வலதுசாரி கட்சி ஒன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கட்சியின் சார்பில் ஜோர்ஜியா மெலோனி, இத்தாலியின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பொதுத் தேர்தலில், வலதுசாரி கட்சியான ‘இத்தாலியின் சகோதரர்கள்’ (Brothers of Italy) கட்சி, வெறும் 4% ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், தற்போது, தேசத்தின் பல முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டும் எனக் கருதிய அந்நாட்டின் மக்கள், ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். ஆனால், அதே வேளையில், மேட்டோ சால்வினிஸ் தலைமையிலான கூட்டணி கட்சி, முந்தைய தேர்தலில் பெற்றிருந்த 17% வாக்குகளில் இருந்து சரிவடைந்து, 9% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, 8% வாக்குகளை வென்றுள்ளது. இதனால் அறுதிப் பெரும்பான்மையோடு “இத்தாலியின் சகோதரர்கள்” கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நடந்து முடிந்த வாக்குப்பதிவில், மொத்தமாக 64% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டின் தேர்தலில், 74% வாக்குகள் பதிவாகி இருந்தன. மேலும், இந்த ஆண்டு, இத்தாலியின் வரலாற்றில், மிகக் குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், மரியோ ட்ராகி இத்தாலியின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், பாரீஸ் மற்றும் பெர்லின் தரப்புகளுடன் நெருங்கி செயல்பட்டதால், 18 மாத ஆட்சிக் காலத்திற்கு பின்னர், ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருக்குப் பின்னர், தற்போது, மெலோனி ஆட்சி அமைக்க உள்ளார். பெரும்பான்மை வாக்குகளை வென்று மெலோனியின் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டாலும், அவரது கூட்டணி உறுப்பினர்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, ஆட்சிப் பொறுப்பு சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி கண்ட பின்னர், ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன், மெலோனிக்கு முதல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.