மின்சார வாகனங்கள் மூலம் உணவு விநியோகத்தை மேற்கொள்ள, ஸ்விக்கி மற்றும் கோகோரோ நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. அதன்படி, கோகோரோ நிறுவனம், தனது ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஸ்விக்கி நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. அத்துடன், ஸ்விக்கி விநியோக சங்கிலியில் தனது பேட்டரி ஸ்வாபிங் தொழில்நுட்பத்தை புகுத்தி மேம்படுத்த உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, ஒவ்வொரு நாளும் 8 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை, மின்சார வாகன விநியோகத்தின் மூலம் நிறைவேற்ற உள்ளதாக, ஸ்விக்கி நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக, பல்வேறு மின்சார வாகன நிறுவனங்களுடன் ஸ்விக்கி ஒப்பந்தத்தில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட், ஹீரோ லெக்ட்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தற்போதைய நிலையில், மின்சார வாகனங்கள் மூலமாக, 40% செலவுகள் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோகோரோ நிறுவனத்தின் தற்போதைய இணைப்பு மேலும் நன்மை அளிப்பதாக அமையும் என கருதப்படுகிறது.