கடந்த நிதி ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் 210% உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2022 மே மாதத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை அபரிமித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அமீரகத்திலிருந்து செய்யப்படும் வெள்ளி இறக்குமதிக்கு 7% மட்டுமே சுங்க வரி விதிக்கப்படுகிறது. மேலும், 160 மெட்ரிக் டன் வரையிலான தங்கம் இறக்குமதிக்கு 1% வரிச்சலுகை கொடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், அமீரகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு 1070 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி தவிர மற்ற பொருட்களின் இறக்குமதியில் 25% வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.