தீபாவளி பண்டிகை சமயத்தில், “தன்தேரஸ்” எனப்படும் சிறப்பு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதன் போது, தங்கம், வெள்ளி, ஆடைகள் போன்ற புதிய பொருட்களை வாங்குவது இந்திய மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்தேரஸ் அனுசரிக்கப்பட்டது. இந்த நாட்களில், இந்தியாவின் தங்க விற்பனை 35% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகரித்து வரும் பண வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை அதிக திருமணங்கள் நடைபெறும் என்பதால், திருமணங்களுக்கான நகை விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், இணையதளம் வாயிலாக நகைகள் வாங்கும் போக்கு 35 முதல் 40% வரை உயர்ந்துள்ளது.
இது குறித்து பேசிய இந்தியாவின் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா, “அண்மையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம், சாதகமான பருவமழை மற்றும் பண்டிகைக்கால சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றால், இந்த ஆண்டு சில்லறை நகை வணிகம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில், இந்த வருடம் 35% வளர்ச்சி பதிவாகியுள்ளது. குறிப்பாக, மும்பையில், கனரக தங்க நகைகள் திருமணத்திற்காக அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளன” என்று கூறினார். மேலும், கொல்கத்தாவில் இயங்கும் செங்கோ கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் கூறுகையில், ஆண்களுக்கான நகை விற்பனையில் புதிய உச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்களுக்கான மோதிரங்கள் மற்றும் செயின்கள் ஆகியவை அதிகமாக விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் தன்தேரஸ் நாட்களில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 45857 ரூபாய் ஆக இருந்தது. பொதுவாக, இந்தியாவிலேயே தென்னகத்தில் தான் அதிக அளவு தங்க நகைகள் வாங்கப்படும். அந்த வகையில், தென்னிந்தியாவிலும் 35 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர், “மங்களகரமான தன்தேரஸ் நாட்களில், எளிய தங்க நகைகளின் விற்பனை தென்னிந்தியாவில் அதிகரித்துள்ளது” என்று கூறினார். மேலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரமேஷ் கல்யாணராமன், வரவிருக்கும் கல்யாணம் மாதத்தால், திருமண நகைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறினார்.














