கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக படத்தின் இசை அமைப்பாளர் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கு அடுத்த உயரிய விருதாக திரைத் துறையினரால் கருதப்படுவது கோல்டன் குளோப் விருது. இந்த விழா Hollywood Foreign Press Association சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும், பாடலுக்கான பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ‘நாட்டு நாட்டு’பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதினை வென்றுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கோல்டன் குளோப் விருது வென்றிருப்பது மிகவும் சிறப்பான சாதனை. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பிரேம் ரக்ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ்.எஸ்.ராஜமவுலி, ராம் சரண் உள்பட ஆர்ஆர்ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் பெருமைப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.