நேற்று நடைபெற்ற ‘கூகுள் பார் இந்தியா’ நிகழ்வில், கூகுள் நிறுவனம் கடன் சேவையில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, சிறிய அளவிலான கடன் சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக, பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளது.கூகுள் நிறுவனத்தின் யுபிஐ பரிவர்த்தனை செயலி ‘ஜிபே’ ஆகும். இந்த செயலி மூலம், சிறிய கடன்களை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. ‘சாஷே லோன்’ என இந்த சிறிய கடன் சேவை அழைக்கப்படுகிறது. இதன் மூலம், 10000 ரூபாய் முதல் 100000 ரூபாய் வரையிலான தொகை கடனாக வழங்கப்படும். இந்த தொகையை திருப்பிச் செலுத்த, 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்படும். கூகுள் நிறுவனத்தின் இந்த திட்டம் மூலம், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பயன்பெறுவர். அத்துடன், தனிநபர்களின் அவசர கால தேவைகளை இந்த கடன் சேவை பூர்த்தி செய்யும் எனக் கூறப்படுகிறது.