சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்கள், பிரபலங்கள் மற்றும் யூட்யூபர்கள் ஆகியோருக்கான புதிய வழிமுறைகளை இந்தியாவின் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிமுறைகள் மூலம், பொதுமக்களை தவறாக வழிநடத்துதல் தவிர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பிரபலங்களுக்கு 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
“பிரபலங்கள் வெளியிடும் விளம்பரங்கள், எளிமையான மொழியில் அனைவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும். விளம்பரப்படுத்தப்படும் சேவை அல்லது பொருள் குறித்த விளக்கங்களை முழுமையாக பெற்று, போதுமான அறிவை பிரபலங்கள் கொண்டிருக்க வேண்டும். வெறும் யூகத்தின் அடிப்படையில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. சமூக ஊடகப் பிரபலங்கள், தாங்கள் பயன்படுத்தாத பிராண்டுகளை விளம்பரம் செய்யக்கூடாது. விளம்பரங்களுக்கான முன்னெச்சரிக்கை தகவல்களை, மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் படி அமைக்க வேண்டும். விளம்பரப் பதிவுகளில், advertisement, ad, sponsored, collaboration, partnership போன்ற வார்த்தைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். தலைப்பாகவோ, ஹேஷ்டேக் வடிவிலோ இதனை இணைத்துக் கொள்ளலாம்” - இவ்வாறான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.