ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ம் தேதி உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையில் சில பகுதிகளைத் தவிர்த்தும், சில விஷயங்களை சேர்த்தும் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், முதல்வர் உத்தரவின் பேரில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை அளித்தனர்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று டெல்லியில் தங்கும் அவர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேரவை நிகழ்வுகள் தொடர்பாக விளக்குவார் என்று கூறப்படுகிறது.