நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுக்கப்படுவதாகவும், வார ஓய்வு வழங்குவதில்லை எனவும் புகார் எழுந்து வந்தது. மேலும் நிர்வாகம் டிரைவர் கண்டக்டர்கள் வேறு வழித்தடத்திற்கு செல்ல முடியாது,அதிக நேரம் பணி செய்ய முடியாது எனக் கூறினால் அவர்களை தற்காலிக பணிநீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்து வந்துள்ளது. இதனால் நிர்வாகத்தை எதிர்த்து போக்குவரத்து பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பழிவாங்கும் நிர்வாகம் அதிக பணிசுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இவர்களிடம் தொழிற்சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கூறினர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விடுப்பு மற்றும் வார ஓய்வு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் மூன்று மணி நேரத்திற்கு பின்பு கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் போது 45 பேருந்துகளில் ஐந்து பேருந்துகள் மட்டுமே இயங்கின.